search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்று கடையடைப்பு போராட்டம்"

    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.
    சென்னை :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டத்தை நசுக்க போலீசார் நடத்தியிருக்கும் காட்டு தர்பாரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடுமையாக கண்டிக்கிறது.

    முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான சாமானிய மக்களை கைது செய்திருக்கலாமே அன்றி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் மக்கள் போராட்டம் திடீரென்று ஏற்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடக்கும் போராட்டம்.

    கண்மூடித்தனமான போலீசாரின் காட்டு தர்பார் 12 உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 65 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த காட்டு தர்பாருக்கு ஒட்டுமொத்த காவல்துறையோ, அரசோ காரணம் என்று சொல்லிவிட முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலையின் பணபலமே இதற்கு காரணமாக இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை செய்து பணத்துக்காக பணியாற்றிய கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த காட்டு தர்பாரை கண்டித்து 24-ந்தேதி(இன்று) தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.

    தமிழக வரலாற்றில் இந்த காட்டுதர்பார் ஒரு கறைப்படிந்த அத்தியாயம், வணிகர்கள், விவசாயிகள், பொதுத்துறை ஊழியர்கள் என்று போராடும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக இதுபோன்ற காட்டு தர்பார் கட்டவீழ்த்து விடப்படலாம். இன்றே அதற்கு முடிவு கட்டுவதற்கு கடையடைப்பில் அனைத்து வணிகர்களும் பங்கேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×